புதுச்சேரியில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கரோனா பரவலை தடுக்கும் விதமாக, ஏற்கனவே அங்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
தொடர்ந்து வரும் மே 24ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், பால், மீன், இறைச்சி கடைகள், மருந்துப் பொருள்கள், உணவுப் பொருள்கள் விற்பனையகங்கள், அத்தியாவசிய கடைகள் உள்ளிட்டவை மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும்.
இதேபோன்று வங்கிகள், வங்கிகள் சார்ந்த பணிகளுக்கு 12 மணிவரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு ஏப்ரல் 25ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மக்கள் கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால் விரைவில் முழு ஊரடங்கு விதிக்கப்படும் என தெரிவித்தார்.