கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்வகையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
அந்த வகையில் புதுச்சேரியிலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக, திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மதியம் 2 மணிக்குப் பிறகு ஊரடங்கு நேற்று (ஏப்ரல் 26) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஏப்ரல் 30ஆம் தேதி நள்ளிரவு வரை தொடரும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி உணவகங்கள், தேநீர்க்கடைகளில் உணவு அருந்த அனுமதி இல்லை. பார்சல் மட்டுமே வழங்கப்படும். குறைந்த அளவிலான பொதுமக்களைக் கொண்டு வாகன போக்குவரத்து இயக்க அனுமதி உண்டு. மேலும் வழிபாட்டுத் தலங்கள் மூடப்படுவதால், குடமுழுக்கு விழா பக்தர்கள் இன்றி நடத்த அனுமதி வழங்கப்படும்.
குறிப்பாக அத்தியாவசிய கடைகளைத் தவிர பிற கடைகளைத் திறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தொழிற்சாலை, மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், உணவுப்பொருள்கள் விற்கும் கடைகள், பழக்கடைகள், கறி மற்றும் மீன் கடைகள் மட்டுமே திறக்க அனுமதி உண்டு.
நகைக் கடை, ஜவுளிக் கடைகள், வணிக வளாகங்கள், பெரிய கடைகளைத் திறக்க அனுமதியில்லை.
மேலும் நேற்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதிவரை அனைத்து மதுபான கடைகள், சாராயக் கடைகள், கள்ளுக்கடைகள் மூட வேண்டும். இது குறித்து காவல் துணை ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.