மேற்கு வங்கத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் மக்களிடையே கடும் அதிருப்தியை சந்தித்து வருகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமிழந்து விட்ட நிலையில், மே மாதத்தில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று அக்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்திற்கு அடிக்கடி செல்லும் மத்திய அமைச்சர் அமித் ஷா, வியூகங்களை வகுத்து வருகிறார். இந்நிலையில், மம்தா பானர்ஜிக்கு விசுவாசியாக இருந்து வந்த சுவேந்து அதிகாரி, திரிணாமுல் தலைமையை கேள்வி எழுப்பி வருகிறார். அவர் போக்குவரத்து மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்தார். ஹூக்ளி ஆற்றுப் பாலங்கள் வாரியத் தலைவராகவும் இருந்தார். இந்நிலையில், தேர்தல் நெருங்குவதையொட்டி மம்தா கட்சியில் பல மாற்றங்களை செய்து வந்தார்.
அதன்படி சுவேந்துவிடம் இருந்த மாவட்ட பொறுப்பு பறிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த சுவேந்து அதிகாரி நேற்று (நவ.26) ஹூக்ளி நதி பாலம் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக கல்யாண் பானர்ஜியை வாரியத் தலைவராக முதலமைச்சர் மம்தா நியமித்தார். இதனைத்தொடர்ந்து சுவேந்து அதிகாரி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சுவேந்து அதிகாரி தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தார். முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார்.
சுவேந்து அதிகாரி ராஜினாமா, திரிணாமுல் காங்கிரசுக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் அவருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த மூத்த தலைவர் செளகதா ராய் முயற்சி எடுத்து வருகிறார். எம்பி பந்தோபாத்யாவும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சுவேந்து அதிகாரியை பாஜகவிற்குள் இணைக்க அக்கட்சி மூத்த தலைவர்கள் முனைப்பில் இருப்பதாக தெரிகிறது.
இதையும் படிங்க: இலங்கையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை; கொழும்பு சென்றார் அஜித் தோவல்