கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி விநியோகம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்வதற்கான கால அளவை 28 நாள்களிலிருந்து ஆறு முதல் எட்டு வாரங்களாக மத்திய அரசு நீட்டித்துள்ளது.
60 வயதுக்கு மேலானவர்கள், மற்ற நோய்களால் பாதிப்படைந்த 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
அதில், "அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கருத்தில்கொண்டு, முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் இடையேயான கால அவகாசத்தை நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும் கோவிட்-19க்கான தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய வல்லுநர் குழுவும் மாற்றியுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டு 6 முதல் 8 வாரங்களுக்குள்ளாக இரண்டாவது டோஸை செலுத்திக்கொண்டால் கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு மேலும் மேம்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, முதல் டோஸ் போட்டுக்கொண்டு நான்கு முதல் ஆறு வாரங்களில் இரண்டாவது டோஸ் செலுத்தப்படுகிறது. கடந்த ஜனவரி 16ஆம் தேதி, சுகாதார மற்றும் கரோனா முன்களப் பணியாளர்களுக்கு முதன்மையாகத் தடுப்பூசி போடப்பட்டது.