டெல்லி: இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு தொற்றுநோய்க்கு எதிராக 65 சதவீத பாதுகாப்பு இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் 19 நோய்த்தொற்றுக்கு எதிராக போராடுவதில் தடுப்பூசி செயல்திறன் குறித்து வேலூரை தளமாகக் கொண்ட கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சி.எம்.சி) ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் இந்திய தடுப்பூசிகள் சிறப்பாக செயல்படுவதாகவும், கடுமையான நோய்க்கு எதிராக இது சிறப்பாக செயல்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வைத் தொடர்ந்து, சி.எம்.சி இப்போது மாறுபாடுகளுக்கு எதிரான தடுப்பூசி செயல்திறன் குறித்து ஒரு ஆய்வு செய்ய ஆலோசித்து வருகிறது. சி.எம்.சி நடத்திய இந்த ஆய்வில், தொற்று நோய்களை அளிப்பதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறியுள்ளது.
சி.எம்.சி ஆய்வு
வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி சார்பில் ஜனவரி 21 முதல் ஏப்ரல் 30 வரை 8 ஆயிரத்து 991 (84.8%) சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசி 93 சதவீதம் பேர் செலுத்திக்கொண்டனர். ஆக்ஸ்போர்டின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி, பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின், மற்ற தடுப்பூசிகளும் தொற்றுக்கு எதிராக செயல் படக்கூடியது என ஆய்வில் தெரியவந்துள்ளது
பிப்ரவரி 21 முதல் மே 19 வரை சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று அறிகுறி இருந்ததையடுத்து ஆர்டி.பி.சிஆர் பரிசோதனை மேற்கொண்டதில் ஆயிரத்து 350 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்
இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை வரவில்லை. இந்த தடுப்பூசிகள் தொற்றுநோய்க்கு எதிராகப் போராடி பாதுகாப்பை உறுதி செய்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று நோயின் தொடக்கத்தில் உயிரிழந்த ஊழியர் ஒருவருக்கு பல நோய்கள் இருந்தன. அவர் தடுப்பூசி எடுக்கவில்லை. சுகாதார பணியாளர்கள் 17 சதவீதம் பேர் இரண்டாவது டோஸை எடுக்க முடியவில்லை. இரண்டாவது டோஸ் எடுக்க முடியாமல் போனதற்கான காரணம் தடுப்பூசி பற்றாக்குறை என்றார்கள். கோவிஷீல்ட்டின் முதல், இரண்டாவது டோஸ்க்கு இடையிலான இடைவெளியில் வழிகாட்டுதல்களில் மாற்றங்கள் ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டினார்கள்.
ஆய்வின் முடிவு
இங்கிலாந்தில் 23 ஆயிரத்து 324 சுகாதார பணியாளர்களை ஆய்வு செய்ததில் தடுப்பூசி பாதுகாப்பு 89 சதவீதம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம், கரோனா தொற்றில் இருந்து குறைந்த செலவில் பாதுகாப்பு, நோய் தீவிரத்தை குறைத்தல், நோய் பரவல் சங்கிலியை திறம்பட உடைப்பது உள்ளிட்டவற்றை தடுப்பூசிகள் சிறப்பாக செய்து வருகின்றன. தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மோசமான பாதிப்பை தடுக்க முடியும் என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க : கரோனா 2ஆம் அலை: 724 மருத்துவர்கள் உயிரிழப்பு