கரோனா இரண்டாம் அலை நாட்டையே உலுக்கிவரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கரோனா பாதித்த முதியவர் செய்த செயல் அனைவரின் நெஞ்சையும் கனக்கச் செய்துள்ளது.
வட மாநிலங்களின் பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கைகளின்றி பல கரோனா நோயாளிகள் தவித்துவருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்ட தங்களது அன்புக்குரிவர்களைக் காக்க ஒவ்வொருவரும் அரும்பாடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்கத்தின் தன்னார்வலரான நாராயணராவ் பவுராவ் தபட்கர் (85), தனக்கு கிடைத்த மருத்துவமனை படுக்கையை ஒரு இளைஞனுக்காக விட்டுக்கொடுத்துள்ளார்.
நாராயணராவ் ஒரு வாரத்திற்கு முன்னதாக கரோனாவால் பாதிக்கப்பட்டு, தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். ஆனால், அவரது உடல் நலம் மோசமாகவே அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக பல மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
ஆனால், எங்கும் படுக்கை கிடைக்கவில்லை. பல கட்ட முயற்சிகளுக்குப் பின்னர், அவருக்கு நாக்பூரில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை கிடைத்தது.
ஆனால், மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில், அங்கு வந்த ஒரு பெண் தொற்று பாதிக்கப்பட்ட தனது கணவருக்காக கண்ணீர் மல்க மருத்துவரிடம் மன்றாடுவதைக் கண்டுள்ளார். அப்போது, மருத்துவமனையில் படுக்கை தட்டுப்பாடு நிலவியதால், மருத்துவரால் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகச் செயல்பட முடியவில்லை.
இதையடுத்து, மருத்துவரிடம் சென்று தன்னுடைய படுக்கையை அந்தப் பெண்ணின் கணவருக்கு அளிக்குமாறு நாராயண் தெரிவித்துள்ளார். ஆனால், இது நாராயணின் உயிருக்கு ஆபத்து என்பதால் மருத்துவர் மறுப்பு தெரிவித்துள்ளார். நாராயணோ தன் முடிவில் பிடிவாதமாக இருந்துள்ளார்.
தொடர்ந்து, "நான் என் வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்துவிட்டேன். எனது ஐசியு படுக்கையை தேவைப்படுபவர்களுக்குத் தருகிறேன்" எனக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.
அந்த மனிதர் குல மாணிக்கம் நாராயணராவ், துரதிருஷ்டவசமாக, வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். நாராயணராவின் இந்தத் தன்னலமற்ற செயல் பலரின் கண்களைப் பனிக்கச் செய்துள்ளது.