இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
கர்நாடகா மாநிலத்திலும் கரோனா தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளது. தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தையும், உயிரிழப்பு எண்ணிக்கை 500ஐ தொடுகிறது. வைரஸ் பரவலை தடுத்திட பல்வேறு கட்டுபாடுகளுடன் கடந்த மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அந்த ஊரடங்கு எதிர்பார்த்த பலனைத் தந்திடவில்லை. தொற்று பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
இதற்கிடையில், புதிய கட்டுபாட்டுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (மே.10) முதல் அமலுக்கு வரும் என்று முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்திருந்தார். இன்று முதல் மே 24ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கின் போது, மதுக்கடைகள், உணவகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. உணவுகளை பார்சல் மூலம் வாங்கிச் செல்லலாம். உணவை வாங்க வாடிக்கையாளர்கள் நடந்தே வர வேண்டும். வாகன போக்குவரத்துக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு-தனியார் பஸ்கள் இயக்கத்திற்கு அனுமதி இல்லை போன்ற பல்வேறு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.