இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று (ஏப்.18) மட்டும் நாட்டில் 2,61,500 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், மொத்த எண்ணிக்கை 1,47,88,109ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் கரோனா உயிரிழப்பு குறித்த உண்மைத் தகவல் வெளியிடப்படவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "கரோனாவால் உயிரிழந்தோரை மாரடைப்பால் உயிரிழந்ததாகவும், நீரிழிவு நோயால் உயிரிழந்ததாகவும் தெரிவித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. ஏப்ரல் 17ஆம் தேதி மட்டும் 78 பேர் கரோனாவால் உயிரிழந்ததாக குஜராத் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ஆனால், மயானத்தில் 689 பேரின் உடல் கரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி புதைக்கப்பட்டதாக ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இதுதான் குஜராத் மாடல்" என்றார்.