புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உதவியாளராக ஈஷா அரோரா இருந்து வருகிறார். சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு சென்று வந்த அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் ஈஷா தங்கியிருந்த முதலாவது தளத்தில் இருந்த கிரண்பேடி மற்றும் ஊழியர்கள் 25 பேருக்கு இன்று (டிசம்பர் 30) கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "துணை நிலை ஆளுநர் மாளிகையில் பணியாற்றியவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, ஆளுநர் கிரண்பேடி இரண்டு முறை பரிசோதனை எடுத்துக்கொண்டார். தற்போது, அவரது உதவியாளருக்கு தொற்று உறுதியாகியுள்ளதால் மூன்றாவது முறையாக கிரண்பேடி பரிசோதனை எடுத்துக்கொண்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆளுநர் கிரண்பேடிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவு நாளை (டிசம்பர் 30) தெரியவரும் என சுகாதாரத் துறை அலுவலர்கள் கூறியுள்ளனர்.