டெல்லி: கோவிட் மூன்றாவது அலை பரவல் குறித்து ஐஐடி கான்பூர் பேராசிரியர்கள் ராஜேஷ் ரஞ்சன் மற்றும் மகேந்திர வர்மா ஆகியோர் பேட்டியளித்தனர். அப்போது அவர்கள், “இந்தாண்டு செப்டம்பர்- அக்டோபரில் கோவிட் பரவலின் மூன்றாவது அலை உச்சத்தில் இருக்கும்" என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்கள் கூறுகையில், “மூன்றாவது அலை குறித்து மக்களிடையே பெருத்த கவலை ஏற்பட்டுள்ளது. நாங்கள் இரண்டாவது அலை தொடர்பாக ஆய்வுகள் செய்து மூன்றாவது அலையின் அளவுகள் குறித்தும் அதன் சாத்தியக் கூறுகள் குறித்து கண்டறிந்தோம்.
நாட்டில் மூன்றாவது அலை என்பது தவிர்க்க முடியாதது. இது செப்டம்பர்- அக்டோபரில் உச்சம் பெறும். சில நேரங்களில் இது இரண்டாவது அலையை விட குறைவான வீரியத்தில் காணப்படலாம்” என்றார்.
மேலும், “இரண்டாம் அலை சில வடகிழக்கு மாநிலங்களில் (மிசோரம், மணிப்பூர், சிக்கிம்) தவிர மற்ற மாநிலத்திலும் கணிசமாகக் குறைந்துவிட்டது. பெரும்பாலும் நேர்மறை விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
ஆனால் கேரளா, கோவா, சிக்கிம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் இன்னும் 10 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் உள்ளன” என்றனர்.
முன்னதாக கடந்த சனிக்கிழமை (ஜூன் 19) செய்தியாளர்களை சந்தித்த டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா, “அடுத்த 6 அல்லது 8 வாரங்களில் கோவிட் பரவலின் மூன்றாவது அலை தாக்கக் கூடும். இது குழந்தைகளை தாக்கும் என்பதில் நிச்சயமில்லை” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விரைவில் மூன்றாவது அலை- மாநிலங்களின் நிலை என்ன?