இந்தியாவில் ஒரு கட்டத்தில் உச்சத்தை தொட்டிருந்த கரோனா பரவல், கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து குறைந்துவருகிறது. இந்நிலையில், கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அக்டோபர் 15ஆம் தேதி முதல் தொடர்ந்து 37 நாள்களாக குறைந்துவருகிறது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45,674 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இதுவரை நாட்டில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 85.07 லட்சமாக உயர்ந்துள்ளது.
தற்போது நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 5,12,665 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் உறுதி செய்யப்படும் கரோனா தொற்றில் சுமார் 67 விழுக்காடு குறிப்பிட்ட 10 மாநிலங்களில் மட்டும் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 7,201 பேருக்கும் டெல்லியில் 6,953 பேருக்கும் மகாராஷ்டிராவில் 3,959 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49,085 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78.68 லட்சமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் இருந்து 7,120 பேரும் மகாராஷ்டிராவில் இருந்து 6,478 பேரும் குணமடைந்துள்ளனர்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 559 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். அவர்களில் 150 பேர் மகாராஷ்டிராவையும் 79 பேர் டெல்லியையும் சேர்ந்தவர்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எந்த முன்னேற்றமும் இன்றி நிறைவு பெற்ற இந்தியா-சீனா பேச்சுவார்த்தை!