கரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் குறித்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதிகள் அசோக் பூஷன், ஆர். சுபாஷ் ரெட்டி, எம். ஆர். ஷா ஆகியோர் கொண்ட அமர்வு இதுகுறித்து கூறுகையில், கரோனாவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருப்பது உலகப் போர் என தெரிவித்தது.
”குறைந்த விலையிலான சிகிச்சை அனைவருக்குமான அடிப்படை உரிமை”
கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் கவுரமாக கையாளப்படவில்லை என்பதை கருத்தில் கொண்ட நீதிபதிகள், குறைந்த விலையிலான சிகிச்சை அனைவருக்குமான அடிப்படை உரிமை என தெரிவித்தனர். இதுகுறித்து நீதிமன்றம் மேலும் கூறுகையில், "இந்திய அரசியலமைப்பு பிரிவு 21-இன்படி, சுகாதாரம் அனைவருக்குமான அடிப்படை உரிமை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது குறைந்த விலையிலான சிகிச்சை அனைவருக்குமான உரிமை. எனவே, அதனை வழங்க மாநில அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
முன்னேப்போதும் இல்லாத அளவுக்கு நிகழ்ந்த பெருந்தொற்றின்போது, உலகில் உள்ள அனைவரும் ஏதேனும் ஒரு வழியில் பாதிப்பை சந்தித்தனர். எனவே, கரோனாவுக்கு எதிரான உலக போரை அரசு, மக்கள் ஒன்றிணைந்து தவிர்க்க வேண்டும். உள்ளூர் நிர்வாகம், மாநில அரசு ஆகியவை கூடுதலான திருத்தங்கள் மேற்கொண்டு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளின் கட்டணங்களில் கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும்" என்றது.