டெல்லி: இந்தியாவின் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2022ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
நேற்று (மார்ச் 28) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், இரண்டு பத்ம விபூஷண், ஒன்பது பத்ம பூஷண் மற்றும் ஐம்பத்து நான்கு பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். முன்னதாக கடந்த மார்ச் 22ஆம் தேதி நடைபெற்ற விழாவில் 54 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற விழாவில், கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா, இணை நிர்வாக இயக்குநர் சுசித்ரா எல்லா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி கௌரவித்தார். மருத்துவத்துறையில் செய்த பங்களிப்பிற்காக பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம், கரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் உள்நாட்டு தயாரிப்பு தடுப்பூசியைத் தயாரித்து வழங்கி வருகிறது.
இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஆகியவை பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.
முன்னதாக நேற்று நடந்த விழாவில் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோவிட் காரணமாக விமான போக்குவரத்துதுறைக்கு எவ்வளவு இழப்பு தெரியுமா? - அரசு தகவல்