புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவில் பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது. இந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதியில் மேலும் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா என்று சோதனை நடத்தினர்.
அப்போது தண்டவாளம் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினர். இதை தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நாட்டு வெடிகுண்டுகளை சின்ன கொசப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரிஷி என்ற ரிஷி குமார் (வயது 22), மற்றும் அவரது கூட்டாளிகளான பெரியார் நகரை சேர்ந்த கவுதமன் (23), அரவிந்த் (23) மற்றும் கவியரசன் (22) ஆகியோர் பதுக்கி வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை காவல்துரையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் அரியாங்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் ரிஷி தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இன்று அதிகாலை அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் வெடிகுண்டு செய்த இடத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை செய்துகாட்ட வைத்தனர்.
இதனையடுத்து வனத்துறை அலுவலகம் அருகே புதரில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கவுதம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டு வெடிகுண்டை போலீசார் பறிமுதல் செய்தனர். வெடி குண்டு பதுக்கி வைத்தது குறித்து அவர்களிடம் முக்கிய குற்றவாளியான ரிஷியிடம் போலீசால் விசாரணை நடத்தினர்.
அதில் ரிஷி ஏற்கனவே திருமணமானவர் ஆட்டு பட்டியில் உள்ள தனது கள்ளக்காதலியை 2-வதாக திருமணம் செய்ய அந்த பெண்ணின் அண்ணனிடம் பெண் கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே அவரை கொலை செய்ய திட்டமிட்டு வெடிகுண்டு தயாரித்து ரயில்வே தண்டவாளத்தில் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் வெடிகுண்டு தயாரிப்பில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட ரிஷி மீது ஏற்கனவே கொலை மற்றும் வெடிகுண்டு வழக்குகளும், 3 பேர் மீது அடிதடி, கொலை முயற்சி வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசிய இருவர் கைது: சிசிடிவி காட்சி