ஹைதராபாத் (தெலங்கானா): கோயம்புத்தூர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் விமானப்படை பயிற்சி பள்ளிக்கு எம்ஐ-17வி5 என்னும் ராணுவ ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பயணம் செய்தனர்.
ஹெலிகாப்டர் குன்னூர் நஞ்சப்ப சத்திரம் அருகே சென்றபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவத்தன்று 13 பேரும், ஏழு நாள் சிகிச்சைக்கு பின்னர் குரூப் கேப்டன் வருண் சிங்கும் உயிரிழந்தனர்.
நேர்மையான விசாரணை
இந்த விபத்து குறித்து முப்படையைச் சேர்ந்த குழுவினர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விமானப்படை தளபதி விவேக் ராம் சௌத்ரி தெலங்கானாவின் துண்டிக்கல் மாவட்டத்தில் உள்ள விமானப்படை அகாதமிக்கு வருகை தந்தார்.
அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "ஹெலிகாப்டர் விபத்தை பார்த்த அனைத்து சாட்சியங்களையும் விசாரிக்க உள்ளதால், விசாரணை தொடங்க சில வாரங்கள் ஆகும்.
இந்த விபத்து குறித்து ஒவ்வொரு கோணத்திலும், எந்த இடத்தில் தவறு நடந்தது என்ற கோணத்திலும் விசாரிக்க ஏர் மார்ஷல் மனவேந்தர் சிங்கிற்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால், அதுகுறித்து எதுவும் கூறுவதாக இல்லை. ஆனால், இந்த விசாரணை நேர்மையாக நடைபெறும் என்பதை உறுதிப்படுத்துகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: பிபின் ராவத் உள்ளிட்டோரை மீட்ட தீயணைப்புத் துறையினரின் துயரம் - செவிசாய்க்குமா அரசு?