இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வசித்து வரும் மெய்தி சமூக மக்கள், தங்களை பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்க்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு பிற பழங்குடியின சமூக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுவே வன்முறைக்கு முக்கிய காரணமாக உருவெடுத்துள்ளது.
நேற்று (மே 28) மீண்டும் வன்முறை வெடித்த நிலையில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. சிரோயு, சுக்னு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் பொதுச்சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, வன்முறையாளர்கள் மீது பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இதுகுறித்து முதலமைச்சர் பிரேன் சிங் கூறுகையில், "கிராமங்களுக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள் வீடுகளுக்கு தீ வைத்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 40 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இயல்பு நிலையை கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என கூறினார்.
இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (மே 29) மணிப்பூர் செல்கிறார். 3 நாட்கள் அவர் பல்வேறு ஆலோசனைகளில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் மெய்தி மற்றும் குக்கி சமூக பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பழங்குடி சமூக மக்கள் அமைதி காக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதுகுறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்தா ராய் கூறுகையில், "பழங்குடியின மக்களை சந்தித்து அவர்களது கருத்துக்களை கேட்க முடிவு செய்துள்ளோம். இரு சமூக மக்களும் அமைதி காப்பது அவசியம்" என கூறினார்.
மணிப்பூர் மாநிலத்தை பொறுத்தவரை மெய்தி சமூக மக்கள் 53 சதவீதம் பேர் வசிக்கின்றனர். பெரும்பாலும் இச்சமூக மக்கள் இம்பால் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ளனர். நாகா மற்றும் குக்கி இன மக்கள், 40 சதவீதம் பேர் மலைக்குன்று பகுதிகளில் வசிக்கின்றனர். இந்நிலையில், மெய்தி சமூக மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் (ST) சேர்க்க வலியுறுத்தினர். இதன் மூலம் அவர்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் வனப்பகுதி நிலங்கள் கிடைக்கும். ஆனால் இக்கோரிக்கைக்கு குக்கி சமூக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கடந்த மாதம் நடந்த பேரணியின் போது வன்முறை வெடித்தது. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வீடுகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் தீக்கிரையாயின. மேலும் 75 பேர் உயிரிழந்தனர். வன்முறையை கட்டுப்படுத்த பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இதற்கிடையே, மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில், கட்டுப்பாடுகள் 11 மணி நேரம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆறரை மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.