புதுடெல்லி: கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம், பங்குச்சந்தையில் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாக, அமெரிக்காவின் ஹிண்டன் பெர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியது. இதையடுத்து பங்குச்சந்தையில், அதானி குழுமத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.
இதற்கிடையே, ஹிண்டன்பெர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டை மறுத்த அதானி குழுமம், இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான தாக்குதல் இல்லை என்றும், இந்தியாவின் மீதான தாக்குதல் எனவும் கண்டனம் தெரிவித்தது. இவ்விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ள நிலையில், கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அதானி குழுமத்துக்கு எதிராகவும், பங்குச்சந்தையில் அந்நிறுவனம் மோசடி செய்துள்ளதாக எழுந்தப் புகார் குறித்தும் உரிய விசாரணை நடத்த வலியுறுத்தியும், வரும் 17-ம் தேதி காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடி செய்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த ரிசர்வ் வங்கி மற்றும் செபி அமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளோம். நாங்கள் தனியார் முதலீடுகளுக்கு எதிரி அல்ல. ஆனால், குறிப்பிட்ட நிறுவனத்துக்கு பல ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி ஆதரவுடன் செயல்பட்டதை தான் எதிர்க்கிறோம். அதானி மற்றும் பிரதமர் இடையேயான தொடர்பு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு மட்டுமே விசாரிக்க முடியும்" எனக் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், "அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பினால் எங்களை அச்சுறுத்துகிறார்கள். கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே எங்கள் தரப்பின் முக்கிய கோரிக்கை. இதில் இருந்து நாங்கள் பின்வாங்கப் போவதில்லை" என்றார்.
இதையும் படிங்க: தாஜ்மஹாலை 'இந்த' 3 நாட்கள் இலவசமாக சுற்றிப்பார்க்கலாம்!