டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது.
முதலமைச்சராக சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே பொறுப்பில் உள்ளார். இதற்கிடையில் அரசுக்கும், கூட்டணிக்கும் எதிராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் தொடர்ந்து பேசிவந்தார்.
இது கூட்டணி கட்சித் தலைவர்களான தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அழைப்பின்பேரில் மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே (Nana Patole) டெல்லி சென்றார்.
அங்கு ராகுல் காந்தியை அவரது வீட்டில் சந்தித்தார். சில மணி நேரங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மகாராஷ்டிரா காங்கிரஸ் பொறுப்பாளர் ஹெச். கே. பாட்டீல் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நானா பட்டோலே, “எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதித்தோம். மகாராஷ்டிராவில் முதன்மை கட்சியாக காங்கிரஸை மாற்ற பணிகளை முடுக்கிவிடவுள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல் கட்சியின் உயர்மட்ட குழு முடிவு செய்யும். தற்போது நடைபெறவுள்ள மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும்” என்றார்.
இதையும் படிங்க : தமிழில் பதவியேற்ற விஜய் வசந்த்!