டெல்லி: காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்களுடன் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி நேற்று (ஜூன் 24) காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
நாடு தழுவிய போராட்டம்
இக்கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், “2021 மே மாதத்தில் மொத்த விலைக் குறியீட்டின் அதிகரிப்பு 12.94 விழுக்காடாக இருந்தது. இது கடந்த 11 ஆண்டுகளின் விலைக் குறியீட்டினைவிட மிக அதிகமானது.
இதனைக் கண்டிக்கும்விதமாக ஒன்றிய அரசை எதிர்த்து, வருகின்ற ஜூலை 7 முதல் 17ஆம் தேதி வரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
இந்தப் போராட்டத்தில் மகளிர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், தோழமைக் கட்சியினர், பொதுமக்கள் ஈடுபடுவர். அதன் பிறகு காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், தொழிலாளர்களும் மாவட்ட அளவில் சைக்கிள் பயணம் மேற்கொள்வார்கள்.
காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், தொழிலாளர்களும் மாநில அளவில் ஊர்வலங்கள் நடத்துவார்கள். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி நாடு முழுவதும் உள்ள அனைத்து பெட்ரோல் சேமிப்பு நிலையங்களிலும் போராட்டம் நடத்தப்படும்.
போராட்டத்தின் நோக்கம்
இந்தப் போராட்டத்தின் நோக்கம் எரிபொருள், எரிவாயு மீதான அதிகப்படியான கலால் வரியைத் திரும்பப் பெறுவதாகும்.
தொற்றுநோய், பொருளாதார மந்தநிலை, வேலையின்மை காலங்களில் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் இப்போராட்டம் அமையும்” என்று கூறினார்.
தடுப்பூசி குறித்து சோனியா பேசியதாவது:
“கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை உறுதிசெய்யும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் பணியாற்ற வேண்டும்.
அப்போதுதான் இந்தாண்டு இறுதிக்குள் 75 விழுக்காடு தடுப்பூசி மக்களுக்குச் செலுத்த முடியும். மேலும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களிடம் உள்ள தயக்கத்தைப் போக்கும் நடவடிக்கையிலும் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட வேண்டும்.
இன்னும் சில மாதங்களில் கரோனா மூன்றாவது அலை தொடர உள்ளதாகவும், அது குழந்தைகளைத் தாக்கும் இடர் உள்ளது என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் இந்தக் காலகட்டத்தில் மக்களுக்குத் தேவையான உதவிகளை அளித்து பணிகளைத் தொடர வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: இஷாந்த் சர்மாவுக்கு கையில் காயம்...இங்கிலாந்து டெஸ்டில் விளையாடுவாரா?