காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல்(71). இவர் அக்.1ஆம் தேதி கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சையின்போது இவருக்கு உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க, அகமது படேலின் உடல்நிலை மோசமானது. இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு அகமது படேல் உயிரிழந்தார். இதனை அவரது மகன் ஃபைசல் படேல் உறுதி செய்தார்.
அகமது படேல் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளராக இருந்தார். முன்னதாக அவர் 1985ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தியின் நாடாளுமன்ற செயலாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால பொருளாளர் மோதிலால் வோஹ்ரா விலகிய பின்னர், 2018ஆம் ஆண்டில் அவர் கட்சியின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார்.
எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினரான அகமது படேல், மக்களவையில் மூன்று முறையும், மாநிலங்களவையில் ஐந்து முறையும் பணியாற்றினார். இவரது மறைவு காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.