காங்கிரஸ் மூத்த தலைவரும், சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகருமான 71 வயதான அகமது படேல், கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று காலை உயிரிழந்தார். சோனியா காந்தியின் நம்பிக்கைக்கு பாத்திரமான அகமது படேலின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான பரூச் நகரில் நடைபெற்றுவருகிறது.
இதில், ராகுல் காந்தி, மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக அவர் 1985ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தியின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றினார். காங்கிரஸ் கட்சியின் நீண்ட கால பொருளாளர் மோதிலால் வோரா அப்பதவியிலிருந்து விலகிய பின்னர், 2018ஆம் ஆண்டில் அவர் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.
எட்டு முறை நாடாளுமன்ற உறுப்பினரான அகமது படேல், மக்களவையில் மூன்று முறையும், மாநிலங்களவையில் ஐந்து முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியல் பல பிரச்னைகள் வந்தபோது, அதனை தீர்த்து வைத்தவர் அகமது படேல் ஆவார்.