ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தலால் ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவரானால் அடுத்த முதலமைச்சராக சச்சின் பைலட்டை கொண்டு வர காங்கிரஸ் தலைமை முடிவு செய்ததாக தெரிகிறது. இதற்கு கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்பது போல கெலாட் நடந்து கொண்டாலும், காங்கிரஸ் தலைவராக ஆனாலும், முதலமைச்சராகவும் நீடிக்க வேண்டும் என்ற ஆசையில் கெலாட்தான் ஆதரவாளர்களை தூண்டிவிடுகிறார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் ராஜஸ்தான் அரசியலில் உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது.
ஒருபுறம் முதல்வர் பதவி நீடிக்குமா? இல்லையா? என்ற கவலையில் கெலாட் இருக்க, மறுபுறம் அவர் அறிவித்த திட்டங்கள் கிடைக்குமா? என்ற கவலையில் ராஜஸ்தான் மக்கள் இருக்கின்றனர். இதுதொடர்பாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஏராளமான பதிவுகளை வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.
"கெலாட் ஜி, நீங்கள் முதலமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அறிவித்தபடி இலவச ஸ்மார்ட் போன்களை கொடுத்துவிட்டுச் செல்லுங்கள் ஐயா!"
"எங்களுக்கு செல்போனை கொடுத்துவிட்டு, நீங்கள் அரசியலில் போராடுங்கள்"
"கிளம்பும் முன் இலவச மொபைல் போன்களை கொடுக்க வேண்டும்"
இப்படி வரிசையாக மீம்களையும், பதிவுகளையும் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
மாநில அரசின் சுகாதார காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள, 1.35 கோடி பெண்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என கடந்த மாதம் ராஜஸ்தான் அரசு அறிவித்திருந்தது. செல்போனுடன் மூன்று ஆண்டுகளுக்கான இன்டர்நெட் சேவையும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளிக்கு முன்னதால செல்போன்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்ததால், நெட்டிசன்கள் இவ்வாறு கலாய்த்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் - காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தியுடன் ஆலோசனை