டெல்லி : அதானி குழுமம் பங்குகளில் முதலீடு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் இரண்டு மொரிசியஸ் நிறுவனங்கள், கடந்த 10 ஆண்டுகளாக இந்திய வரித்துறை ஆணையத்தின் விசாரணை வளையத்தில் உள்ளதாகவும், அந்த இரண்டு நிறுவனங்கள் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.
அமெரிக்கா வர்த்தகம் மற்றும் தடயவியல் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி மாதம் அதானி குழுமம் வரி ஏய்ப்பு, செயற்கை முறையில் பங்குகளின் மதிப்பை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறி அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதானி குழுமத்தின் பங்குகள், பங்குச் சந்தையில் வீழ்ச்சி அடைந்தன. அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பும் சரிந்தன. மேலும் அதானி குழும முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த அனைத்து கட்சி உறுப்பினர்கள் அடங்கிய நாடாளுமன்றக் கூட்டுக் குழுவை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கம் எழிப்பின.
மேலும், அதானி குழுமம் முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. பங்குச் சந்தையில் அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதா எனக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, இந்திய பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்தும் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தணை ஆணையமான செபிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சாப்ரே தலைமையில் 6 சிறப்பு வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இதனிடையே ஹிண்டன்பர்க் ஆய்வு குறித்து விசாரிக்க 6 மாதங்கள் அவகாசம் கோரி அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் செபி முறையிட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் 3 மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யக் கோரி உத்தரவிட்டது.
இந்நிலையில், அதானி குழுமத்தில் முறைகேடாக முதலீடு செய்ததாக ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ள இரண்டு மொரிசியஸ் நிறுவனங்கள் தொடர்பாக எழுந்த புகார் குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய வரித்துறை ஆணையம் விசாரித்து வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "அதானி நிறுவனத்தில் முறைகேடு முதலீடுகள் செய்ததாக ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ள இரண்டு மொரிசியஸ் நிறுவனங்கள் குறித்து கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்திய வரித்துறை விசாரித்து வருகிறது.
வழக்கமான முறையாக இதுவரை அந்த இரண்டு நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் இல்லை. மேலும், ஒன்று அல்லது இரண்டு முறை சம்பிரதாய நிகழ்வாக இந்திய வரித்துறை அந்த இரண்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் உள்ளது" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், "இந்த விவகாரத்தில் செபி மற்றும் எப்போதும் அதிவேகமாக இயங்கும் வருமான வரித்துறை உள்ளிட்ட துறைகள் தூக்கத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. அதனால் தான் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டதாக கூறப்படும் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத நிதி, எங்கு இருந்து வந்தது என்பதை நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று காங்கிரஸ் திரும்பத் திரும்ப கூறி வருகிறது" என்று ஜெயராம் ரமேஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க : "நட்புக்கும் கற்பு உண்டு" - புற்றுநோயால் இறந்த நண்பருடன் உடன்கட்டை ஏறிய இளைஞர்!