உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி காங்கிரஸ் கட்சி தலைமையிலான குழு குடியரசுத் தலைவரை நாளை (அக்.13) காலை சந்திக்கவுள்ளது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஏகே ஆண்டனி, குலாம் நபி ஆசாத், அதிர் ரஞ்சன் சௌத்ரி, மல்லிகார்ஜுன கார்கே, கேசி வேணுகோபால் ஆகியோரின் குழு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளை, குடியரசுத் தலைவர் ஐந்து பேரை மட்டுமே சந்திக்க அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் அக்டோபர் மூன்றாம் தேதி, வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையின்போது விவசாயிகள் மீது காரை ஏற்றியதாக ஆஷிஷ் மிஸ்ரா மீது விவசாயிகள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி தீவிரமாகக் கையிலெடுத்து போராடிவருகிறது. பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்க்கச் சென்ற பிரியங்கா காந்தியை காவலில் வைத்த உத்தரப் பிரதேச காவல்துறை, காங்கிரசின் போராட்டத்திற்குப் பின்னர் சந்திக்க அனுமதி அளித்தது.
எதிர்க்கட்சிகள் போராட்டம், உச்ச நீதிமன்ற தலையீடு போன்றவற்றால் பூதாகரமான நிலையில் ஆஷிஷ் மிஸ்ரா உத்தரப் பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஆஷிஷ் மிஸ்ராவின் தந்தையான ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி - நிபுணர் குழு பரிந்துரை