புதுச்சேரி: வெள்ளையனே வெளியேறு இயக்க நாள் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. வைசியால் வீதியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து சைக்கிள் பேரணி தொடங்கியது.
இதில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசமி, மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு காமராஜர் கடற்கரைச் சாலையில் உள்ள மகாத்மா காந்தி, நேரு உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாஜக அரசு ஒரு கதம்பம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, "நாட்டின் சுதந்திரம், நரேந்திர மோடி அரசால் பறிபோகியுள்ளது. அனைத்து அத்தியாவசிய பொருள்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. மத்திய பாஜக அரசு மக்களை வஞ்சித்துள்ளது. அடிமை ஆட்சி நடத்தும் நரேந்திர மோடி அரசை தூக்கி எறிந்தால்தான் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க முடியும்.
இரண்டாவது ஒரு சுதந்திரப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தயாராகி உள்ளது" என்றார். தொடர்ந்து புதுச்சேரியில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ், பாஜக அரசு ஒரு கதம்பம் அரசு என்றும், கரோனா ஒழிப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த முடியாமல் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசு உள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ரூ.6000 நிதியுதவி