பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சித்துவுக்கும், முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. இதனால், மாநிலத்தில் உட்கட்சி பூசல் அதிகரித்தது.
பஞ்சாப் காங்கிரஸில் நிலவும் உள்கட்சி மோதலைத் தீர்ப்பதற்காக சோனியா காந்தி தலைமையில் கடந்த வாரம் மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இம்மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், காங்கிரஸ் உட்கட்சிப் பூசலை உடனடியாக தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் மேலிட தலைவர்கள் இருந்தனர். தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக, நவ்ஜோத் சிங் சித்துவை நியமித்து, கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
மேலும், சங்கத் சிங் கில்ஜியான், சுக்விந்தர் சிங் டேனி, பவன் கோயல், குல்ஜித் சிங் நக்ரா ஆகியோர் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டம்... வைகோவிடம் பிரதமர் மோடி நலம் விசாரிப்பு