டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரியில் கடந்த 3ஆம் தேதி நான்கு விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டனர்.
அதன்பின்னர் நடந்த வன்முறை சம்பவங்களில் மேலும் ஒரு உள்ளூர் செய்தியாளர் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு 9ஆக உயர்ந்தது. தற்போது இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், லக்கிம்பூர் வன்முறை குறித்த விரிவான உண்மை விளக்கும் அறிக்கையை சமர்ப்பிக்க காங்கிரஸ் தரப்பில் இருந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அக்டோபர் 9ஆம் தேதியிட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
எந்த நடவடிக்கையும் இல்லை
இதுகுறித்து, காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் நடந்த விவசாயிகள் மீதான படுகொலை சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இதில், ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா விவசாயிகளுக்கு விடுத்த எச்சரிக்கையும், அவரின் குடும்பத்தினர், மகன் ஆகியோர் இருந்த ஜீப் விவசாயிகள் மீது கண்மூடித்தனமாக மோதுவது என்பதும் மிகவும் துயரமானது.
விவசாயிகள் மீது மோதிய அந்த வாகனம் ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஓட்டியதை அங்கிருந்த விவசாயிகள் பலரும் பார்த்துள்ளனர். அவர்கள் தான் இந்த வன்முறையை நேரில் கண்ட சாட்சிகளாகவும் உள்ளனர்.
இதுதொடர்பாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டும், உச்ச நீதிமன்றம் தலையீட்டுக்குப் பிறகும் கூட அமைச்சர் மீதோ அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவர் மீதோ சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
7 பேர் கொண்ட குழு
இதனால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழு லக்கிம்பூர் விவகாரத்தில் விரிவான உண்மை விளக்கும் அறிக்கையைத் தயாரித்து உள்ளது.
ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால், மூத்தத் தலைவர்கள் ஏ.கே. ஆண்டனி, மல்லிகார்ஜுன கார்கே, குலாம் நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இந்த அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அறிக்கையைத் தங்களிடம் அளிக்க நேரம் ஒதுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா பெயரும் அடிபட்டுள்ளது.
இதையடுத்து அவர் நேற்று (அக்.9) குற்றவியல் அலுவலகத்தில் ஆஷிஷ் மிஸ்ரா ஆஜரான நிலையில், அவரிடம் 12 மணிநேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், ஆஷிஷ் மிஸ்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட, அவருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: லக்கிம்பூர் வன்முறை; ஒன்றிய அமைச்சர் மகனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!