சண்டிகர்: ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோடக்கில் கடந்த வெள்ளிக்கிழமை ஆக.11 ஆம் தேதி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 15 வயது பள்ளி சிறுமியை காரில் சென்ற சில மர்ம நபர்கள் வழிமறித்து கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் ஒருவரை தேடி வருவதாகவும் சம்ப்லா பகுதி டிஎஸ்பி ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பின்னர் அந்த சிறுமியை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, அங்கு அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமியிடம் சத்தமிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டியுள்ளனர். பின்னர் ஹோட்டலில் இருந்து அந்த சிறுமி தங்களது குடும்பத்தை தொடர்பு கொண்டதன் மூலம் அந்த சிறுமியின் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் அந்த தகவலின் அடிப்படையில், விரைந்து சென்ற போலீசார் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து, பாதிக்கப்பட்ட மாணவியை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் 21 வயது முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், தற்போது அவர்கள் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சம்ப்லா டிஎஸ்பி ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் விசாரணையில், அந்த 4 பேரில் ஒருவர் அந்த சிறுமிக்குத் தெரிந்தவர் என்றும், அவர்தான் அந்த சிறுமி பள்ளிக்குச் செல்லும் வழியில் மறித்து காரில் ஏற்றியுள்ளார் என்றும், தற்போது அந்த கார் டிரைவர் தலைமறைவாக உள்ளதால் அவரை தேடும் பணியில் உள்ளதாக டிஎஸ்பி டிஎஸ்பி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, ஹரியானாவின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா கூறியது, "குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினர் இந்த விவகாரத்தில், விரைந்து செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க நீதிமன்றமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்யுமாறு ரோஹ்தக் எம்எல்ஏ பிபி பத்ராவிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இது குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (National Crime Records Bureau) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஹரியானாவில் நாளொன்றுக்கு சுமார் 4 முதல் 5 பாலியல் வழக்குகள் மற்றும் 12 கடத்தல் வழக்குகளும் பதிவு செய்யப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது என ஹூடா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், பாதிக்கப்பட்ட சிறுமியையும், அவரின் குடும்பத்தையும் மருத்துவமனையில் சந்தித்து ஆறுதலைத் தெரிவித்த எம்எல்ஏ பத்ரா, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்து உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மிகவும் அதிர்ச்சி அடைந்து உள்ளதாகவும், அந்த சிறுமிக்குத் தேவையான சிகிச்சை உடன் சேர்த்து ஆலோசனையையும் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.