கொல்கத்தா:கரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், தேர்தல் கூட்டங்கள், ஊர்வலங்களை தடை செய்யக் கோரி, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பல பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றின் மீது விசாரணை நடைபெற்ற நிலையில், அது குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையின் மீது கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பொதுநல மனுக்கள் மீதான இன்றைய(ஏப்.21) விசாரணையில் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பிய கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.பி.ராதாகிருஷ்ணன், 'கையில் எல்லா அதிகாரமும் இருந்தபோதிலும், சாதாரண மக்களுக்கு அறிவுரை சொல்வதைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.
மக்கள் கரோனா விதிகளைப். பின்பற்றாதபோது நீங்கள் என்ன செய்தீர்கள்? காவல் துறை மற்றும் நிர்வாகம் இரண்டின் அதிகாரமும் உங்கள் கைகளில் இருக்கும்போதும் உங்களால் எதுவும் செய்ய முடியவில்லையா? நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்' என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
இவ்வழக்கில் தொடர்புடைய அரசியல் கட்சியின் பிரதிநிதி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி, தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து நாளை(ஏப்.23) அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.