மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, சிவசேனாவின் 33 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று, தற்போதுள்ள மகா விகாஷ் கூட்டணி அரசுக்கு நெருக்கடி அளித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியமைக்க வேண்டும் என அதிருப்தி எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் மகாராஷ்ட்ராவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சிவசேனா தொண்டர்களுக்கு காணொலி வாயிலாக உரையாற்றிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, "முதலமைச்சராக நான் இருக்க தேவையில்லை என எம்எல்ஏக்கள் விரும்பினால், நான் ராஜினாமா செய்ய தயார். ஆனால், முதலமைச்சராக ஒரு சிவசேனா தொண்டர்தான் இருக்க வேண்டும். இதற்கு எம்எல்ஏக்கள் உறுதி அளிக்க முடியுமா?" என்று கூறியிருந்தார்.
இதனிடையே உத்தவ் தாக்கரேவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை(ஜூன் 23) தனது குடும்பத்துடன் அரசு இல்லத்திலிருந்து உத்தவ் தாக்கரே வெளியேறினார். வழிநெடுகிலும் சிவசேனா தொண்டர்கள் அவரை சூழ்ந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில், கரோனா நடைமுறைகளை மீறியதாக பாஜகவினர் அளித்த புகாரின் பேரில், உத்தவ் தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் கரோனா நடைமுறைகளை மீறி தொண்டர்களை சந்தித்ததாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.