கடந்த ஜூன் மாதம், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோதல் நிகழ்ந்தது. இதில், தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு உள்பட 20 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் இரண்டாவது உயரிய விருதான மகா வீர் சக்ரா, சந்தோஷ் பாபுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விருதுக்கு அவரின் பெயரை ராணுவ உயர் மட்ட அலுவலர்கள் பரிந்துரைத்தனர்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற ராணுவ வீரர்கள் மனைவிகள் நலச் சங்கத்தின் தொடக்க விழாவில், சந்தோஷ் பாபுவின் மனைவிக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அவரை துணை மாவட்ட ஆட்சியராக நியமித்து தெலங்கானா அரசு கவுரவித்தது. பின்னர், சந்தோஷ் மனைவிக்கு வீடு வழங்கப்பட்டது.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில், அவருக்கு விருது வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.