கர்நாடகா: 2023 கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஆட்சியமைத்தால் 24 மணி நேரத்தில் நிறைவேற்றுவோம் என்ற முழக்கத்துடன் 5 திட்டங்களை அறிவித்திருந்தது காங்கிரஸ். இதன் படி முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த வாக்குறுதிகளுக்கு கொள்கை ரீதியிலான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இரண்டாவது அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின், அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டு, ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை செயல்படுத்தப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டன. செய்தியாளர் சந்திப்பில் கூறியது போல், சக்தி யோஜனா எனப்படும் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்டம் ஜூன் 11 ஆம் தேதி செயல்படுத்தப்பட உள்ளது.
அதன் படி நாளை(ஜூன் 11) முதல் கே.எஸ்.ஆர்.டி.சி எனப்படும் கர்நாடக சாலை போக்குவரத்து பேருந்துகள் மற்றும் பிஎம்டிசி எனப்படும் பெங்களூரு மாநகர பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணம் தொடங்க உள்ளது. சாலை போக்குவரத்து நிறுவனம் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
இலவசப் பயணத்தைப் பெற, சக்தி ஸ்மார்ட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்குமாறு பெண்களுக்கு கர்நாடக அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. அதுவரை, இலவச பயணப் பயன் பெற விரும்பும் பெண்கள், அரசின் புகைப்பட அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். அதில் அவர்களின் நிரந்தர முகவரி இடம்பெற்றிருக்க வேண்டும். ஜூன் 11 லிருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு பெண்கள் சக்தி ஸ்மார்ட் கார்டை எடுத்துச் செல்வது கட்டாயமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குட்டி யானையிடம் சிக்கிய பைக் ரைடர்.. நூலிழையில் தப்பிய காட்சிகள்
இந்நிலையில் சக்தி யோஜனா திட்டத்தை வித்தியாசமான முறையில் செயல்படுத்தும் விதமாக நடத்துனராக அவதாரம் எடுக்கிறார் முதல்வர் சித்தராமையா. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மெஜஸ்டிக்கில் இருந்து விதான் சவுதா வழித்தடத்தில் எண் 43 பேருந்தில் கண்டக்டராக மாறி டிக்கெட் வழங்கவுள்ளார் சித்தராமையா. இதன் மூலம் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் தனித்துவமாக தொடங்கப்படும்.
பின்னர், சட்டமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் சக்தி யோஜனா திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கும் அன்றைய தினமே, மாவட்டங்களில் அமைச்சர்களால் அதே நேரத்தில் தொடங்கப்பட உள்ளது. கர்நாடகாவில் உள்ள திருநங்கைகள் உட்பட அனைத்துப் பெண்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால், உத்தரவாதம் அளிக்கப்பட்ட 5 திட்டங்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை காங்கிரஸ் அரசு அறிமுகப்படுத்தி, மாநில மக்களின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்துள்ளது.