புதுச்சேரி: பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (மார்ச்.30) காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமிக்கு காவல் துறை சார்பாக அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ரங்கசாமி புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவையின் 2ஆவது கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி கூடி அன்றைய தினமே மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி, 2022- 2023ஆம் ஆண்டிற்கு சுமார் 3613 கோடி ரூபாய் அளவிலான 5 மாத செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், வேலை வாய்ப்பு, நீட் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. அதனை தொடர்ந்து திமுக, காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர். 2022 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கச் சட்ட முன்வரவை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
இதில் ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், என 5 மாத செலவினங்களுக்கான 3612 கோடி ரூபாய்க்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மீது வாக்கெடுப்பு விவாதம் நடைபெற்றது. பின்னர், புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வைக் காலவரையறையின்றி சபாநாயகர் செல்வம் ஒத்தி வைத்தார். காலை 9.30 முதல் காலை 11.35 வரை அவை நடந்தது.
முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த சபாநாயகர் செல்வத்திடம், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் நேரு, பி.ஆர். சிவா, பிரகாஷ் குமார் ஆகியோர், அரசு அதிகாரிகளுக்கு ஊதியம் வழங்குவதற்காகவே இந்த சபை ஒருநாள் கூடுகிறது. அது தவறு என்றும், ஒரு வார காலம் இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரை நீடிக்கச் செய்து, மக்கள் பிரச்சினைகளைப் பேச அனுமதிக்க வேண்டும் என்று கூறி முறையிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'அமைச்சா் துரைமுருகனின் துபாய் பயணம் ரத்தானது ஏன்... காரணம் என்ன?'