புதுச்சேரியில் என்ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணியின் முதலமைச்சராக கடந்த மே 7ஆம் தேதி ரங்கசாமி பதவியேற்றார். என்ஆர். காங்கிரஸ்-பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு, அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது.
தற்போது, கூட்டணிக் கட்சியான பாஜகவிற்குச் சபாநாயகர் பதவியும், இரண்டு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக பாஜகவின் ஏம்பலம் செல்வம் பதவியேற்றார். இருப்பினும், பாஜக சார்பில் இரண்டு அமைச்சர்களுக்கான பட்டியல் வழங்குவதில் இழுபறி நீடித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பாஜக தரப்பில் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு முதலமைச்சர் ரங்கசாமியிடம் அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து என்ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் மூன்று அமைச்சர்களுக்கான பட்டியல் இறுதிசெய்யப்பட்டு, இன்று ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனைச் சந்தித்து அமைச்சர்களுக்கான பட்டியலை வழங்கினார்.
இந்தப் பட்டியல் உள் துறை அமைச்சகம் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். அதன்படி, நாளை அமைச்சர்கள் பதவியேற்பு பத்தரை மணி அளவில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அவைத்தலைவர் அறையில் சாமியார்கள் சிறப்பு பூஜை!