மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், முதலமைச்சர் பதவி, அதன் பதவிக்காலமான ஐந்து ஆண்டுகளும் சிவசேனாவிடம்தான் இருக்கும். இது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டதல்ல எனத் தெரிவித்துள்ளார்.
2024 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பு, காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பெரிய கட்சியாக இருக்கும் என மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் நானா படோல் கூறியது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதையொட்டி சஞ்சய் ராவத் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்.
நானா படோல் பேசி வைரலான வீடியோவில், அவர் முதலமைச்சராக ஆசைப்படுவது தெரிவதாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுவது ஒன்றும் தவறல்ல என்று குறிப்பிட்ட அவர், இதுபோன்று ஒவ்வொரு கட்சியிலும் நபர்கள் இருக்கின்றனர் என்றும் காங்கிரஸ் கட்சியில் உள்ள பல தலைவர் நாட்டையே வழிநடத்தும் திறன்கொண்டவர்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும், மூன்று வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட கட்சிகள் அமைத்த கூட்டணிதான் மகா விகாஸ் அகாதி என்றும் இந்த மூன்று கட்சிகளும் தற்போது ஒன்றிணைந்து அரசியல் தளத்தில் செயலாற்றிவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் யுக்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அண்மையில் சரத்பவாரைச் சந்தித்தது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, 2024 மக்களவைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து நரேந்திர மோடியை எதிர்த்தால் என்ன தவறு என வினவினார்.
2024இல் மீண்டும் மோடி பிரதமராவார் என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, அது நடக்காது என்று நாங்கள் எப்போது கூறினோம். பட்னாவிஸ் தனது கட்சியின் நிலைப்பாட்டைக் கூறுகிறார். அரசியலில் என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது எனப் பதிலளித்தார்.
இதையும் படிங்க: சிவசேனா அடிமையைப் போல் நடத்தப்பட்டது - சஞ்சய் ராவத்