புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்து துணை நிலை ஆளுநர் புதுச்சேரியை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் அண்ணா சதுக்கம் அருகே நேற்று காலை முதல் தொடர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது.
இதில் முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு போராட்ட களத்தில் துணைநிலை ஆளுநருக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இரவு நேரத்திலும் அங்கேயே சாப்பிட்டு முதலமைச்சர் நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டார். அமைச்சர் கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் அனந்தராமன், ஜெயமூர்த்தி, ஜான்குமார், மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் அங்கேயே தார்பாய் விரித்து உறங்க தொடங்கினர். தொடர்போராட்டம் என்பதால் நிர்வாகிகள் அனைவரும் அங்கேயே தொடர்ந்து போராட்டம் நடத்தவும் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில், தொண்டர்களை உற்ச்சாகப்படுத்தும் வகையில் போராட்ட களத்தில் பானிபூரி, பூரி மசாலா , ஆம்லெட், ஆஃப்பாயில் உள்ளிட்டவைகளோடு உணவு பரிமாறப்பட்டு வருகின்றது. போராட்டம் இன்னும் 3 நாள்கள் நடைபெறவுள்ள நிலையில், தற்போது காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாய் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.
இதற்கிடையில், சாப்பிட்ட தட்டுகளை ஆங்காங்கே சாலையில் போட்டுள்ளது அலங்கோலமாக இருப்பதை பார்க்கும் பொதுமக்கள் முகம்சுழித்தவாரு செல்கின்றனர்.
போராட்டம் நடத்தும் இடத்தில் 200க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் மற்றும் முற்றுகை போராட்டத்தை காக்கும் வகையில் வஜ்ரா வாகனம், நீர் பீச்சி அடிக்கும் வாகனம் ஆகியவைகளை கொண்டு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.