அதிதீவிர புயலாக அச்சுறுத்தி வந்த நிவர் புயல் சற்று வலு குறைந்து புதுச்சேரியில் நள்ளிரவில் கரையை கடந்தது. அப்போது கனமழையும் கொட்டியது. இதனால் நகரப் பகுதிகளில், சாலைகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது. குறிப்பாக இந்திரா காந்தி சதுக்கம், புஸ்சி வீதி, கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் உள்ளிட்ட சாலைகளில் முழங்கால் அளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.
முக்கிய சாலைகள் அனைத்திலும் மரங்கள் விழந்து கிடப்பதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விழுந்து கிடக்கும் மரங்கள், மின் கம்பங்களை அகற்றும் பணியில் பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளம் பாதித்துள்ள ரெயின்போ நகர் உள்ளிட்ட பகுதிகளை நேரில் சென்று முதலமைச்சர் நாராயணசாமி இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது, மழைநீர் புகுந்த வீடுகள், சாலைகளை பார்வையிட்ட அவர், ஜெனரேட்டர் மூலம் துரிதமாக நீரை அகற்றுமாறு பொதுப்பணித்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
இதற்கிடையே, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்டுள்ள வாட்ஸ் ஆப் பதிவில், புயலால் புதுச்சேரிக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து சாலைகளில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நிவர் புயலை முன்னிட்டு கடந்த 24 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 26 ஆம் தேதி காலை 6 மணி வரை அறிவிக்கப்பட்ட, 144 தடை உத்தரவு, இன்று மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக புதுச்சேரி பொறுப்பு ஆட்சியர் பூர்வ கார்க் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் வழக்கில் சிக்கிய கபீர் ஆசிரமம்... சட்டவிரோத கட்டடத்தை இடிக்க உத்தரவு!