ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் நவ்ஹம் பகுதியில் சிஐடி காவல் ஆய்வாளர் பர்வேஸ் அஹமது தார் பயங்கரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். நேற்றிரவு (ஜூன் 22) 8 மணியளவில் பர்வேஸ் அஹமது தார் கனிபுரா பகுதியில் தொழுகையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்துவந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக மாறிமாறி சுட்டுக் கொன்றனர். இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். பர்வேஸ் அஹமது தார் பரிம்போரா பகுதியில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்துவந்தார். பர்வேஸின் படுகொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் குறித்து அறிந்ததும் காவல் உயர் அலுவலர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினார். காவல் ஆய்வாளர் பர்வேஸ் அஹமது தாரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது, அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இதை வைத்து காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தத் தாக்குதல் வடக்கு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட மூன்றாவது நாளில் நடந்துள்ளது. காவல் ஆய்வாளர் பர்வேஸ் அஹமது தாருக்கு மனைவியும் 13 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.
பர்வேஸ் அஹமது தார் சுட்டுக்கொல்லப்பட்ட நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகிவருகின்றன.
இதையும் படிங்க: பெண் சிஐடி அலுவலருக்கு நேர்ந்த பரிதாபம்!