மும்பை: ரஃபேல் போர் விமான ஊழல் தொடர்பாக, பிரதமர் மோடியைத் திருடன் என விமர்சித்தது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மீது கடந்த 2019ஆம் ஆண்டு, மும்பை கிர்கான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.
பாஜகவைச் சேர்ந்த மகேஷ் ஸ்ரீமால் என்பவர் வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கிர்கான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்க உத்தரவிட்டது. ராகுல் காந்தி நேரில் ஆஜராகவும் சம்மன் அனுப்பியது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த நிலையில், அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கு இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜனவரி 25ஆம் தேதி வரை ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என கிர்கான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இதையும் படிங்க: பன்னீர் பர்கருக்கு பதில் சிக்கன் பர்கர் டெலிவரி - சொமேட்டோவுக்கு ஃபைன்