அகமதாபாத்: 182 உறுப்பினர்களைக்கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த பல மாதங்களாக குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் கவனம் செலுத்தி வருகிறார்.
அடிக்கடி குஜராத்திற்கு பயணம் மேற்கொண்டு, மக்களிடம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானும் மூன்று நாட்கள் பயணமாக குஜராத் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகிய மூன்று முதலமைச்சர்களும் இன்று குஜராத்தில் அரசியல் பேரணிகளில் உரையாற்றவுள்ளனர்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், இன்று பனஸ்கந்தாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து, சபர்கந்தா, ஆரவல்லி மாவட்டங்களில் நடைபெறும் பேரணிகளிலும் உரையாற்றவுள்ளார்.