நீண்ட நாட்களாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் நீடித்து வந்தநிலையில், அம்மாநிலத்தில் துணைநிலை ஆளுநராக ஐந்து ஆண்டுகாலம் இருந்து வந்த கிரண்பேடியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நீக்கி உத்தரவிட்டுள்ளார். தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாராயணசாமி வரவேற்பு
துணை நிலை ஆளுநர் மாற்றத்தை வரவேற்ற முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்துக்கு 2016ஆம் ஆண்டு வந்தபிறகு, விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டார். அதற்கு பிறகு புதுச்சேரி மாநில மக்களை மதிக்காமல், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், புதுச்சேரியின் வளர்ச்சிக்கு தொடர்ந்து தடையாக இருந்துவந்தார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மதிப்பளிக்காமல், பல இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்வதும், அலுவலர்களுக்கு நேரடியாகவும், தன்னிச்சையாகவும் உத்தரவிடுவதுமாக இருந்து வந்தார். அவர் மக்களுக்கு உள்ள அதிகாரத்தை, மக்கள் கொடுத்த வாக்குறுதிகளை பறிக்கின்ற வேலையை தொடர்ந்து செய்துவந்தார்.
புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி
மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை எல்லாம் தடுத்து நிறுத்தினார். கோப்புகளை திருப்பி அனுப்பினார். அவரது இந்த செயல்களை எதிர்த்து மதச்சார்பற்ற கூட்டணி கட்சியினர் பல கட்ட போராட்டங்களை நடத்தினோம். அதன் விளைவாகதான் எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானது என்பதை உணர்ந்து நரேந்திர மோடி அரசானது கிரண்பேடியை, இங்கிருந்து தூக்கி எறிந்திருக்கிறது. இது புதுச்சேரி மாநில மக்களுக்கு கிடைத்த வெற்றி. புதுச்சேரி மாநில மக்களின் உரிமைகளை பறிக்கின்ற யாராக இருந்தாலும் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
இதனிடையே, கிரண்பேடி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அலுவலகம் எதிரே அக்கட்சியின் தொண்டர்கள் முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.