புதுச்சேரி: புதுச்சேரியில் பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. ]
புதுச்சேரியில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக ரெயின்போ நகர், செல்லா நகர், பாவாணர் நகர், சாமிபிள்ளைத் தோட்டம், வெங்கட்டா நகர் போன்ற தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால், இருசக்கரம் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சில இடங்களில் வீடுகளில் மழைநீர் உட்புகுந்ததால் அப்பகுதியில் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். புதுச்சேரியை பொருத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் 12செ.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து, மழை பெய்து வருவதால் அப்பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் தொய்வடைந்துள்ளன.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: நகராட்சி அதிகாரிகள் கொண்ட குழு அனைத்து பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்கின்றனர். இருப்பினும், தேவையான இடங்களில் மோட்டார்களை பொருத்தி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கனமழை காரணமாக இன்று (நவ.14) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு: இதனிடையே முதலமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் மழை பாதிப்புகளை நேரில் சென்று இன்று (நவ.14) ஆய்வு செய்தனர். அதன்படி கிழக்கு கடற்கரை சாலை, மடுவூபேட், சாமிபிள்ளைத் தோட்டம், ரெயின்போ நகர், பவழ நகர், வாழைக்குளம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் நீரை உடனே வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!