டெல்லி: நீதிமன்ற அறைக்குள் செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஒரு வழக்கறிஞரைப் பார்த்து இந்திய தலைமை நீதிபதி (Chief Justice of India) டி.ஒய்.சந்திரசூட் கோபமடைந்தார். வழக்கறிஞரிடம், "இது என்ன சந்தையா, இங்கே வா. செல்போனைக் கொடு” என தலைமை நீதிபதி தெரிவித்தார்.
பின்னர் அந்த வழக்கறிஞரின் செல்போனை கோர்ட் மாஸ்டரிடம் கொடுக்கும் படி தலைமை நீதிபதி கூறினார். மேலும், "இது ஒரு சந்தை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அங்கு நீங்கள் எடுத்துச் செல்லலாம். கோர்ட் மாஸ்டரிடம் செல்போனைக் கொடுங்கள். எதிர்காலத்தில் கவனமாக இருங்கள்" என மீண்டும் கூறினார்.
மேலும், அவர், "நாங்கள் கோப்பில் மட்டும் கவனம் செலுத்துகிறோம் என நீங்கள் நினைக்க வேண்டாம். நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதையும் கவனித்துக்கொள்கிறோம்" என தலைமை நீதிபதி கூறினார். பின்னர், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ள வழக்கு மீதான விசாரணையைத் தொடர்ந்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இந்தியாவின் 50-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றார். தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு சீர்திருத்தங்களைக் மேற்கொண்டு வருகிறார். ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்த நீதிமன்ற அறிக்கைகளை பிற மாநில மொழிகளிலும் வெளியிட நடவடிக்கை மேற்கொண்டார். தற்போது மேலும் பல மாநில மொழிகளில் நீதிமற அறிவிப்புகளை வெளியிடும் பணி நடந்து வருகிறது.
சமீபத்தில் பெண்கள் குறித்த வழக்குகளில் பெண்களை குறிப்பிடும் வார்த்தைகளில் பயன்படுத்தப்படக் கூடாதா வார்த்தைகள் குறித்தும், அந்த வார்த்தைகளுக்கு பதிலாக பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள் குறித்தும் கையேட்டினை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நீதிமன்ற அறையில் வழக்கறிஞர் செல்போன் பயன்படுத்தியதற்கு அவர் கடிந்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: கால் ரெக்கார்ட் செய்வது சட்டவிரோதம்...! சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!