புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வுசெய்வதற்காக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா புதுச்சேரி சென்றார். அவருடன் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார், கூடுதல் டைரக்டர் ஜெனரல் ஷேபாலி, பி. சரண், பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா, தேர்தல் துணை ஆணையர் சந்திரபூஷண் குமார், இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, செயலர் மலேய்மாலிக் ஆகியோரும் உடன் சென்றனர்.
இவர்கள் தனியார் நட்சத்திர விடுதியில் வைத்து புதுச்சேரியில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளை அழைத்து கருத்துகளைக் கேட்டு அறிந்தனர். கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழ்நாட்டோடு சேர்ந்து புதுச்சேரிக்கும் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் வயதானவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசுத் துறை அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் இடமாற்றம் செய்ய வேண்டும்.
துணை ராணுவத்தினரைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளைச் சரிசெய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர். தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உறுதி அளித்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை வாக்குச்சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அதில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை, அங்கு கூடுதலாக என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அதேபோல, ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை துணை ராணுவப் படையினர் தேவை என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து சுனில் அரோரா உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி நாடளுமன்ற தேர்தல் - சுனில் அரோரா தகவல்