டெல்லி: கிழக்கு லடாக் எல்லைப் பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனா இடையே பல்வேறு கட்டப்பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், கோக்ரா - ஹாட்ஸ்பிரிங்ஸ் எல்லையிலிருந்து இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கைகளை தொடங்கியதாக கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
இந்த நிலையில், இன்று(டிச.19) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரம் கிழக்கு லடாக் பிரச்னை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
'நிதி ஒதுக்கீட்டு மசோதா 2022' தொடர்பான விவாதத்தின்போது பேசிய அவர், "ஹாட்ஸ்பிரிங்ஸ் எல்லையிலிருந்து படைகளை வாபஸ் பெறும் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு என்ன? - கிழக்கு லடாக்கில் உள்ள டோக்லாம், தேஸ்பாங் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பகுதிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த சீனா ஒப்புக்கொண்டதா? - மத்திய அரசு கூறுவதை வைத்துப் பார்த்தால், எல்லையில் இருநாட்டு படைகளும் இனி ரோந்து பணிக்கு செல்லாதா?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். நிதி ஒதுக்கீட்டு மசோதா குறித்த விவாதத்தில் ப.சிதம்பரம் தேவையற்ற விஷயங்களை பேசுவதாக பாஜக உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.
இதையும் படிங்க:சீனா விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு