பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் அமைந்துள்ளது பட்டோரா கிராமம். இங்கு சுமார் 840 குடும்பங்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் அனைவரும் பெண்களை கௌரவிக்கும் விதமாக, தங்களது வீட்டின் பெயர்களை மாற்றியுள்ளனர். அதாவது அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்களின் பெயர்களை வீட்டின் முன் பெயர் பலகையாக வைத்துள்ளனர். அதில், அவர்கள் செய்யும் தொழில் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நடப்பாண்டின் மகளிர் தினத்தன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து பட்டோரா கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் சிறப்பாகக் கொண்டாடப்படும். அப்போது, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்கள் கவுரவிக்கப்படுவர். அந்தவகையில் இந்த ஆண்டு, ஒவ்வொரு வீட்டிலுள்ள குடும்பத் தலைவிகள், பெண்கள் ஆகியோரின் பெயர்களை பலகையில் அச்சிட்டு ஒவ்வொரு வீட்டிலும் வைத்துள்ளோம். இது அவர்கள் செய்யும் தொழிலையும், தொழில் செய்ய அவர்களுக்கு ஊக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, இந்தப் பலகை அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாகவும் இருக்கும்.
கிராமத்திலுள்ள ஆண்கள் அனைவரும் இந்த முடிவில் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆண்கள், பெண்கள் இருவரும் குடும்பத்தை ஒன்றாக நடத்துகிறார்கள். பெண்கள் வீட்டின் பெரும்பாலான முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்களுக்கும் தலைவராக பொறுப்பு வழங்கப்பட வேண்டும். இது குடும்பத்தில் அவர்களின் பங்கை வலுப்படுத்துவதற்கான முன்னோட்டமாகவும் இருக்கும்" என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.