டெல்லி: மக்களுடன் பிரதமர் உரையாடும் நிகழ்ச்சியான 'மான் கி பாத்'-இல் வானொலியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி சாத் பூஜைக்கு தனது வாழ்த்துகளைத்தெரிவித்தார். மேலும், இந்த சாத் பூஜை பண்டிகை ’ஒரே நாடு, சிறந்த நாடு’(ஏக் பாரத் ஸ்ரேஷ்தா பாரத்) என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியுள்ளது என்றார்.
மேலும் பேசிய அவர், 'பிகார் மற்றும் பூர்வஞ்சால் பகுதிகளைச்சேர்ந்த மக்கள் நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் சரி, அவர்கள் சாத் பண்டிகையைக்கொண்டாடி வருகின்றனர். குஜராத்தில் இதற்கு முன்பு சாத் பண்டிகை இவ்வளவு விமரிசையாக கொண்டாடியதாக எனக்கு நினைவில்லை. ஆனால், தற்போது குஜராத் முழுவதும் இந்த சாத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதைக்காண எனக்கு மிக்க மகிழ்ச்சியாகவுள்ளது.
தற்போது, வெளிநாடுகளில் உள்ளவர்கள் சாத் பண்டிகை கொண்டாடும் புகைப்படங்களையும் நம்மால் காணமுடிகிறது. அதுவே இந்தியாவின் பாரம்பரியம், நம்பிக்கை. அது உலகின் எந்த மூலையிலிருந்தாலும் தொடரும்.
ஆகையால், இன்று(அக்.30) சூரியனை கும்பிடுவதைத்தாண்டி அவர் நமக்களித்த நன்மைகள் குறித்து பேசலாமே..! அவர் நமக்கு ஆசீர்வதித்தது தான் சூரிய மின்சக்தி. உலகின் எதிர்காலமாக இந்த சூரிய மின் சக்தியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை சூரிய பகவான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் கடவுளாய் வணங்கப்பட்டவர் மட்டுமல்ல, நமது வாழ்க்கை முறையிலும் தொடர்பாகியுள்ளார். சூரிய மின் சக்தியைப் பயன்படுத்தும் நாடுகளில் முதன்மையான இடத்தில் இந்தியா விளங்கி வருகிறது' எனப்பேசினார்.
சாத் பண்டிகை, இந்தியாவெங்கும் உள்ள இந்துக்களால் சூரிய பகவானை வணங்கிக்கொண்டாடப்படும் ஓர் பண்டிகையாகும். தொடர்ந்து நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்தப்பண்டிகையில் சூரிய பகவானை வணங்குவது, மத வழிமுறைகளைப்பின்பற்றுவது, விரதம் இருப்பது எனப்பல்வேறு பகுதிகளிலும் ஒரே மாதிரி இந்தியாவெங்கும் கொண்டாடி வரும் பழக்கமாகும்.