புதுச்சேரியில் நான்கு நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்கள், மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து இக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் இடங்களை 'நீட்' தேர்வு அடிப்படையில் சென்டாக் கலந்தாய்வு மூலமே நிரப்பப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், புதுச்சேரி மருத்துவக் கல்லூரிகளில் அம்மாநில மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுமென முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்த நிலையில், 3 தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 27% மட்டுமே ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, புதுச்சேரி மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
அம்மனுவில், 'மாநில அரசு சார்பில் மருத்துவ மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசினுடைய ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளான வெங்கடேஸ்வரா, மணக்குள விநாயகர், பிம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக புதுவை மாநில மாணவர்களுக்கு 27% மட்டுமே ஒதுக்கப்படுகிறது. அதனை 50 விழுக்காடாக உயர்த்தி, இட ஒதுக்கீடு அளிக்க உத்தரவிட வேண்டும்' என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவானது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், புதுச்சேரி மாநில அரசு சார்பில் மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் நிலுவையில் இருப்பதால், கவுன்சிலிங் நடத்த தடை விதிக்கப்படுகிறதென உத்தரவிட்டு, வழக்கின் இறுதி தீர்ப்பு டிசம்பர் 9ஆம் தேதி வழங்கப்படும் எனக் கூறி ஒத்திவைத்தது.
இதையும் படிங்க : புதுச்சேரியில் சீட்டு கம்பெனி ரூ.18 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோர் போராட்டம்