டெல்லி: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு, இன்று (செப்.23) ஆந்திர உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் என்.சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணை முதல் கட்டத்தில் இருப்பதால் வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், நேற்று (செப்.22) விஜயவாடாவிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடுவை சிஐடி காவல் துறையினர் இரண்டு நாட்கள் காவலில் வைக்க அனுமதி அளித்தது.
இதையும் படிங்க: பீகார் துணை முதல்வர் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியது சிறப்பு நீதிமன்றம்!
முன்னதாக, 2015ஆம் ஆண்டு சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி செப்டம்பர் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தன் மீதான வழக்கை (FIR) ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் உத்தரவில் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும், வழக்கு முதல் கட்ட விசாரணையில் இருப்பதால் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனவும், CrPC தொடர்புடைய விதியின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, எனவே காவல் துறைக்கு சட்டப்பூர்வமாக விசாரணை செய்ய உரிமையும், கடமையும் உள்ளதாகவும், புகாரளிக்கப்பட்ட குற்றம் அனைத்து உண்மைகளையும் விபரங்களையும் வெளிப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், உள்ளூர் நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவை சிஐடிக்கு இரண்டு நாட்கள் காவலில் வைக்க அனுமதி அளித்தது. மேலும், ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் சிஜடி காவல் துறையினர் இன்று மற்றும் நாளை (செப்.23, செப்.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரணை செய்ய அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான என்.சந்திரபாபு நாயுடு ஆந்திர உயர் நீதிமன்ற தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிங்க: மணிப்பூர் கலவரம்; இன்று முதல் இணையதள சேவை மீண்டும் தொடக்கம்!