ஹைதராபாத்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த ஜஸ்வந்த் சிங் என்பவர் கடந்த வாரம், பிரிட்டனின் கோவென்ட்ரி நகரின் மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் சீக்கியர்களுக்கான அடையாளமான தலைப்பாகையுடன் பொறுப்பேற்றார். பிரிட்டனில் மேயராக பொறுப்பேற்ற முதல் தலைப்பாகை அணிந்த சீக்கியர் என்ற பெருமையை ஜஸ்வந்த் சிங் பெற்றுள்ளார்.
பஞ்சாபில் பிறந்த ஜஸ்வந்த் சிங் பேர்டி 60 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனின் கோவென்ட்ரி நகருக்கு குடிபெயர்ந்தார். கென்யாவில் படித்து வந்த ஜஸ்வந்த் சிங் தனது உயர்க் கல்விக்காக பிரிட்டனுக்கு சென்றார். ஜஸ்வந்த் சிங், சுமார் 17 ஆண்டுகள் கோவென்ட்ரி நகரத்தின் கவுன்சிலராக பணியாற்றினார். மேயராவதற்கு முன்பு, நகரின் துணை மேயராகவும் பணியாற்றினார்.
இதையும் படிங்க: தீபாவளிக்கு அரசு விடுமுறையா?... இந்தியாவில் இல்லை! அமெரிக்காவில்!
இந்த நிலையில், பஞ்சாபை பூர்வீகமாகக் கொண்ட மற்றொருவர், பிரிட்டனில் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபில் பிறந்த சமன் லால், பிரிட்டனின் பர்மிங்காம் நகரின் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சமன் லால், தான் பர்மிங்காம் நகரின் மேயராக தேர்வு செய்யப்படுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும், இந்தியாவில் பிறந்த ராணுவ அதிகாரியின் மகனான தனக்கும் தனது குடும்பத்திற்கும் இது பெரிய மரியாதை என்றும் தெரிவித்தார். இந்தியாவிலிருந்து பர்மிங்காம் நகரில் குடியேறிய தான், அந்த நகரின் மேயராக வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: வரலாற்று சாதனையை முறியடித்த எர்டோகன் - துருக்கி அதிபராக மீண்டும் தேர்வு!
சமன் லாலின் தந்தை சர்தார் ஹர்னாம் சிங், பஞ்சாப் மாநிலத்தின் ஹோஷியார்பூரைச் சேர்ந்தவர். அவர் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக இருந்தார். கடந்த 1954ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு சென்று, பல ஆண்டுகள் அங்குள்ள ஸ்டீல் நிறுவனத்தில் பணி புரிந்தார். அதன் பிறகு பர்மிங்காமில் குடியேறினார். அதன் பிறகு தாய் தந்தையுடன் வசிப்பதற்காக சமன் லால் கடந்த 1964ஆம் ஆண்டு பிரிட்டன் சென்றார். அப்போதிலிருந்து பர்மிங்காமில் வசித்து வருகிறார்.
சமன் லால் தனது அரசியல் ஆர்வம் காரணமாக, கடந்த 1989ஆம் ஆண்டு சமன் லால் பிரிட்டனின் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். சமத்துவத்தை வலியுறுத்தி பல சமூக நீதிப் பிரச்சாரங்களில் பங்கேற்றார். கடந்த 1994ஆம் ஆண்டு முதன்முதலாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 29 ஆண்டுகளில் அவர் அங்குள்ள பல மக்கள் மன்றக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். போக்குவரத்து அமைச்சரவையின் ஆலோசகராகவும், போக்குவரத்து மேற்பார்வை ஆய்வுக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.
இதையும் படிங்க: அமெரிக்க அதிபரை கொல்ல முயற்சி? - இந்திய வம்சாவளி இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்!